பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள் இரவிலும் தொடர்ந்த போராட்டம்; அமைச்சர் சமரச பேச்சு

சென்னை, ஆக. 26–

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 200 துாய்மை பணியாளர்கள் பேரணியாக வந்து ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை, ஓய்வறை வசதி, சம்பளத்துடன் வார விடுமுறை உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஆறாம் நாளான நேற்று, முதல்வரை சந்திக்க வலியுறுத்தி, 200 துாய்மை பணியாளர்கள் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மூர் தெரு வழியாக பேரணியாக சென்றனர். பின், ரிப்பன் கட்டட வளாகத்துக்குள் நுழைந்து, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பணியாளர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, முதல்வரின் கவனத்துக்கு கோரிக்கைகள் செல்லும் வரை, தினமும் இரண்டு மணி நேரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம் என பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும், போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி, துாய்மை பணியாளர்கள் இரவிலும், ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து, அமைச்சர் ராஜ்மோகன் நேற்றிரவு, துாய்மை பணியாளர்களுடன் பேச்சு நடத்தினார்.

Advertisement