'ரூ.6,000 முதலீட்டில் துவங்கிய தொழில் இப்போது ரூ.30 லட்சத்தில் நடக்கிறது!'

ரசாயனம், பிளாஸ்டிக், செயற்கை நிறங்கள் பயன்படுத்தாமல், பல்வேறு ஆபரணங்களை தயாரித்து விற்பனை செய்யும், 'ஆபரணா கிரியேட்டிவ்ஸ்' நிறுவனரான, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 46 'வயதாகும் சரவணகுமார்:

கொரோனா ஊரடங்கில், பல பொருளாதார இழப்புகளை சந்தித்தேன். இயல்பு நிலை திரும்பியதும், வெறும் வருமானத்திற்காக மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாதிரி தொழில் துவங்கலாம் என்று முடிவெடுத்து, 'ஆபரணா கிரியேட்டிவ்ஸ்' நிறுவனத்தை துவக்கினேன்.

இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணித்திருக்கிறேன். பழங்குடியினர், விலங்குகளின் கொம்புகளில் செய்யும் கலைப் பொருட்கள் என் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, மாட்டுக் கொம்பு, எருமைக் கொம்புகளில், அவர்கள் எவ்வாறு பயனுள்ள பொருட்களை உருவாக்குகின்றனர் என்பதை கற்றுக் கொண்டேன். அதை பின்பற்றி, பல்வேறு அணிகலன்களை தயாரித்து வருகிறேன்.

மண், கற்கள், விதைகள், தானியங்கள், பருப்பு வகைகள், மூலிகைகள், இறைச்சி கடைகளில் வீணாகும் எலும்புகள், மீன் முள் போன்றவற்றை பயன்படுத்தி, ஆபரணங்களை உருவாக்குகிறோம்.

யானைக் கொழிஞ்சி எனப்படும், மரங்களில் படர்ந்து வளரும் பெரிய கொடியின் விதைகள், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே கிடைக்கும். அந்த சமயங்களில் அங்கு சென்று விதைகளை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி நேர்த்தியாக வடிவமைத்து, தனித்துவமான அணிகலன்களாக மாற்றுகிறோம்.

எங்கள் தயாரிப்புகளுக்கு, இயற்கையான பொருட்களில் இருந்து கிடைக்கும் நிறங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். இதனால், குறிப்பிட்ட சில நிறங்களை மட்டுமே பெற முடியும். இயற்கையான நிறங்கள் விரைவில் மங்கிவிடும் என்பதால், இயற்கையான முறையில், 'கோட்டிங்' செய்து பயன்படுத்துகிறோம். தானியங்களில் செய்யப்படும் அணிகலன்களை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

கோவில்களில் உள்ள சிற்பங்கள், துாண்கள், கல் பீடங்களை உறுதியாக இணைக்க, சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அஷ்டபந்தன லேகியத்தை உலர்த்தி, அதன் பழுப்பு நிறம் கறுப்பாக மாறியதும், அதன் வாயிலாக, செப்பேடுகளில் உள்ள உருவங்கள், வடிவங்களை பொறித்து கம்மல் போன்றவற்றை செய்திருக்கிறோம்; இதற்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது.

பலரும் இதே வடிவங்களை, உலோகத்திலும், மரத்திலும் செய்து தரும்படி கேட்டதால் அதையும் செய்து கொடுக்கிறோம். எங்களிடம் ஐந்து ரூபாயில் துவங்கி, 4,500 ரூபாய் வரையில் அணிகலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் எங்கள் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. வெறும் 6,000 ரூபாய் முதலீட்டில் துவங்கிய இந்த தொழில், தற்போது ஆண்டுக்கு 30 லட்சத்திற்கு வியாபாரம் செய்யும் தொழிலாக உயர்ந்துள்ளது.

தொடர்புக்கு: 97862 32413

Advertisement