டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்கள் 2 பேர் காயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே டிப்பர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கள்ளக்குறிச்சி அடுத்த பெரியசிறுவத்துாரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சக்திவேல், 38; டிரைவர். இவர், நேற்று மாலை சங்கராபுரத்தில் இருந்து டிப்பர் லாரியில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சிக்கு சென்றார்.

ஆலத்துார் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தனியார் பள்ளி வேன் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தனியார் பள்ளி வேன் வாகன தகுதிச்சான்று புதுப்பித்து விட்டு சங்கராபுரத்திற்கு சென்றதால் மாணவர்கள் யாரும் இல்லை.

விபத்தில், டிப்பர் லாரி டிரைவர் சக்திவேல் மற்றும் தனியார் பள்ளி வேன் டிரைவர் பரமனத்தம் கிராமத்தைச் சேர்ந்த காசிராஜா மகன் அர்ஜூன், 24; ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர். விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement