தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை ; கவர்னர் ஒப்புதல்

6



சென்னை: தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக திருத்தம் செய்யப்பட்ட புதிய சட்ட மசோதாவுக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசுப் பணிகளில், நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும், அனைத்து காலியிடங்களிலும், 20 சதவீதம் இடங்களை, தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர், அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல், இதுநாள்வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.

இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள், தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ், முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது.

இதை தெளிவுப்படுத்தவும், கடந்த 2010 செப்டம்பர் 7 ம் தேதிக்கு பின், இதுநாள் வரை தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதிப்படுத்தவும், புதிதாக சேருவோருக்கு மட்டும், அச்சலுகையை பயன்படுத்தவும், புதிய சட்ட திருத்த மசோதா கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் , அரசு பணிகளில் தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்கும் இந்தப் புதிய மசோதாவுக்கு கவர்னர் அர்லேகர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement