தென் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தினகரன் ரகசிய பேச்சு; பழனிசாமி மவுனம்

2

சென்னை: அ.தி.மு.க., தென் மாவட்ட நிர்வாகிகளுடன் , அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் தலைமையில் அதிருப்தி அணி செயல்படுகிறது. ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வுக்கு தாவினர். அதேபோல், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும், த.வெ.க.,வில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தென் மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகளை குறி வைத்து, அ.ம.மு.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தொடர் தோல்வியால், அ.தி.மு.க.,வுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது . பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க, 'தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும்' என வேலுமணி உள்ளிட்டோர், கூறி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சரியான திட்டமிடல் இல்லாமல் பழனிசாமிக்கு எதிராக, அவசரம் அவசரமாக செயல்பட்டதால் தான், தினகரன் இந்த நிலையில் இருக்கிறார். எனவே, அ.தி.மு.க., வில், தற்போதைய குழப்பங்கள், தனக்கு சாதகமாக இருந்தாலும், தினகரன் பொறுமையாக இருக்கிறார்.

பழனிசாமிக்கு எதிராக வெளிப்படையாக செயல்பட்டால், முன்பு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும். எப்படியாவது, தன் கைக்கு அ.தி.மு.க., வந்து விடும் என, நினைப்பதால், 'அ.தி.மு.க., - அ.ம.மு.க., இரண்டுமே ஒரே இயக்கம் தான்' என தினகரன் பேசி வருகிறார். ஆனால், தன் தரப்பை பலப்படுத்த நினைக்கும் அவர், தென் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடனும், பழனிசாமியால் பழி வாங்கப்பட்ட நிர்வாகிகளுடனும் பேசி வருகிறார்.

இந்த தகவல் பழனிசாமிக்கு தெரியும். ஆனால், தற்போதைய சூழலில், தினகரனை நேரடியாக பகைத்து கொள்ள அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில், தினகரனின் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement