இந்தியாவில் இருப்பது வரம்: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி டாக்டர் வெளியிட்ட வீடியோ வைரல்

5

லண்டன்: இந்தியாவிலும், பிரிட்டனிலும் உள்ள மருத்துவ சேவையை ஒப்பிட்டு இந்திய வம்சாவளி டாக்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்தியாவில் இருப்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் ஆக உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபாஞ்சலி ஷர்மா இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்னர், டாக்டராக பணிபுரியும் எனது கணவருக்கு மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் தலைவலி ஏற்பட்டது. பிறகு இரவு வாந்தி எடுத்தார்.


இதன் காரணமாக இரவு 10 மணிக்கு மருந்து வழங்க வேண்டிய நிலை உருவானது. இதனால் மருந்து மற்றும் மாத்திரை வாங்க வெளியே சென்று அழைந்தேன். அந்த தருணத்தில் தான் இந்தியாவில் இருப்பது எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டது என்பதை உணர்ந்தேன்.


தற்போது நான் பிரிட்டன் அல்லது மேற்கத்திய நாடுகள் என எங்கு இருந்தாலும் மருந்து வாங்க வரிசையில் நிற்க வேண்டும். அவசர கால துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு. எனது கணவருக்கு உடனடியாக மருத்துவவசதி கிடைக்கவில்லை.

இந்தியாவில் இருந்து இருந்தால், இரவில் தன்னால் வீட்டை விட்டு வெளியேறி மருந்து வாங்கி, கணவரை கவனித்து கொள்ள முடியும். அதே நேரத்தில் இந்தியாவிலும் மருத்துவத்துறையில் நிறைய செய்ய வேண்டி உள்ளது. எந்த நாட்டிலும் 100க்கு 100 சிறந்த சேவை வழங்க முடியும் என்பதை எதிர்பார்க்கக்கூடாது.


இந்தியாவில் அனைவருக்கும் மருத்துவ சேவை என்பது எளிதாக கிடைக்கவில்லை எனக்கூறியுள்ள அந்த டாக்டர், வெளிநாடு செல்பவர்கள் கவனத்தில் ஒன்றை கொள்ள வேண்டும். நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்தியாவில் தற்போது நமக்கு எளிதாக கிடைக்கும் பல விஷயங்களை பெற வெளிநாடுகளில் கடும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்து உள்ளார்.


இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரமும் மருந்துகள் உரிய விலையில் கிடைப்பதையும், மருத்துவ சேவையையும், டாக்டர்களை அணுக முடிவதையும் குறிப்பிட்டு நாட்டை புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement