போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி

5


புதுடில்லி: போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பதிலும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் விளையாட்டு முக்கிய பங்காற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேலோ இந்தியா மாநாட்டில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களிடம் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது; ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமெனில், பல வகையான விளையாட்டுகளில் வீரர்கள் பங்கெடுக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பதிலும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது.

களத்திற்கே செல்லாமல் ஒரு வீரர் மன உறுதியைக் கற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினம். விளையாட்டுகள் நம்மை வெற்றியாளர்களாக ஆக்குவது மட்டுமல்லாமல், சிறந்த போட்டியாளர்களாக மாறுவது எப்படி என்பதையும் கற்பிக்கின்றன. வீழ்வதும், எழுவதும் விளையாட்டு நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

21ம் நூற்றாண்டில் இந்தியாவில் நவீன விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அரசு உறுதிபூண்டுள்ளது. விளையாட்டு பல்கலை முதல் நவீன பயிற்சி மையங்கள் வரை, வீரர்களின் திறமைகளைக் கண்டறிந்து உலகளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்கின்றன. கேலோ இந்தியா சம்வாத் என்பது விளையாட்டுக்கான தளமட்டுமல்லாமல், இளைஞர்களின் சிந்தனைகள், யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை உருவாக்கும் ஒரு முக்கிய மேடையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement