சட்டசபை டிராமா மன்றமாக மாறிவிடக் கூடாது; அண்ணாமலை

21


கோவை : 'சட்டசபை டிராமா மன்றமாக மாறிவிடக் கூடாது. மக்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டும் பேசக் கூடிய இடமாக இருக்க வேண்டும்,' என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் பேசியதாவது; சட்டசபையை பொறுத்தவரையில் அது டிராமா மன்றமாக மாறிவிடக் கூடாது என்பது என்னுடைய கருத்து. சட்டசபை ஆக்கப்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும், மக்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டும் பேசக் கூடிய இடமாக இருக்க வேண்டும். ஆனால், இன்று சட்டசபை நிகழ்வுகளை பார்க்கும் போது, பழைய பஞ்சாயத்துக்களை சட்டசபையில் வந்து தீர்ப்பதாகத் தான் நான் பார்க்கிறேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்துக்களும் சட்டசபையில் தீர்க்கப்படுகிறது. சட்டசபையில் சில உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய பஞ்சாயத்துக்களும் அங்கு தீர்க்கப்படுகிறது.

அதனால், நான் ஏற்கனவே சொன்னதைப் போல, ஆளும் கட்சியின் சார்பாக இருக்கக் கூடிய எம்எல்ஏக்கள் புதியவர்கள். இன்னும் அவர்களுக்கு நிறைய அமர்வுகள் வேண்டும். அவர்களும் வேகமாக தங்களை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிகளிலும் புதியவர்கள் இருக்கின்றனர். இப்போது தமிழக மக்களுக்கு இருக்கக்கூடிய பயமே, சட்டசபை டிராமா மன்றமாக மாறிவிடக் கூடாது என்று இருக்கிறது.

ஐரோப்பா நாடுகளைப் போல, சென்சார் போர்டுகள் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும். இப்போதைய திரைப்படங்களில் நிறைய ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகள் இடம்பெறுகின்றன. எனவே, சில திரைப்படங்கள் முழுமையாக சென்சார் செய்யப்பட வேண்டும். திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை. எத்தனையோ படங்களில் சென்சார் கொடுத்தும், மால்களில் இருக்கும் தியேட்டர்களை தவிர்த்து பல தியேட்டர்களில் அனைவரையும் அனுமதிக்கின்றனர். சில திரைப்படங்கள் மாணவர் சமுதாயத்தை சீரழிக்கிறது. எனவே, சென்சார் குறியீடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

பெண் அதிகாரத்திற்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிரான தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு ஒருபக்கம் கத்துகிறோம். இன்னொரு பக்கம் பெண்களை ஆபாசமாகவும், பாலியல் கருவியாகவும் சினிமாவில் காட்சிப்படுத்துகின்றனர். அதைப் பற்றி எவ்வளவு பேசினாலும், சினிமா என்பது மிகவும் சக்தியானது, அது தவறான சித்தரிப்புகளை ஆரம்பித்திருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement