தமிழக எல்லைக்குள் வாகனங்கள் வர எதிர்ப்பு அரசியல் கட்சியினர் போலீசாரிடையே கடும் வாக்குவாதம்

பந்தலுார்: பந்தலுார் பகுதியில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழக, கேரளா எல்லை பகுதியான தாளூர் சோதனை சாவடியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மாங்கோடு ராஜா தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், மனிதர்களை தாக்கி வரும் புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர். தொடர்ந்து, சுற்றுலா வாகனங்களை தடுத்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, அங்கு வந்த கூடுதல் எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி., சுந்தரேசன் ஆகியோர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கூடுதல் எஸ்.பி., மணிகண்டன், 'திடீரென இப்படி செய்வது தவறு,' என, கூறினார்.

'இங்கு நடக்கும் போராட்டம் குறித்து, கேரளா மாநில கலெக்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் ஏற்கனவே தகவல் கூறப்பட்டுள்ளது,' என, அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

தி.மு.க., நிர்வாகிகளை பார்த்து கூடுதல் எஸ்.பி., 'கடந்த, 5 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்,' என, கேட்டார். இதனால் அனைத்து கட்சியினர் மற்றும் போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து, மாநில எல்லை சோதனை சாவடிகளான, தாளூர், சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.பி., பிருந்தா மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement