வீடு பட்டியல்; 99.6 சதவீதம் கணக்கெடுப்பு நிறைவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி, 99.60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், விடுபட்ட வீடுகளில் கணக்கெடுப்பை முடிக்க களப்பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நம் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 பிப். மாதம் நடைபெற உள்ளது. இதற்கான முதல்கட்டமாக, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும், ஜூலை 17 முதல் 31ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக சுய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, இம்மாதம் 1ம் தேதி முதல் களப்பணியாளர்கள் மூலம் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, உடுமலை, மடத்துக்குளம், காங்கயம், தாராபுரம் ஆகிய ஒன்பது தாலுகாக்களை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டத்தில், 2,942 ஆசிரியர்கள் கணக்கெடுப்பு களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று விவரங்களை சேகரித்து, ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர்.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்களின் எண்ணிக்கை, குடியிருப்போர் விவரம், குடிநீர் ஆதாரம், கழிப்பிடம், சமையல் எரிபொருள், தொலைத்தொடர்பு சாதனங்கள், இணைய வசதி உள்ளிட்ட 34 விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
மாவட்டத்தில் இதுவரை, ஏறத்தாழ 8 லட்சத்து 65 ஆயிரம் கணக்கெடுப்பு வீடுகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வருவாய்த்துறையினர் கூறுகையில், “மாவட்டத்தில் இதுவரை 99.60 சதவீத கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது. தற்போதைய கணக்கெடுப்பு வீடுகளின் எண்ணிக்கை, கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பை மிஞ்சியுள்ளது.
இன்னும் மூன்று நாட்களில் விடுபட்ட மற்றும் எஞ்சிய வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தி, 100 சதவீத இலக்கை எட்டும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,” என்றனர்.
மேலும்
-
சவக்கிடங்குகளில் குவிந்த உறவினர்கள்; சடலங்களை அடையாள காண உதவும் நேபாள போலீசாரின் கியூஆர் குறியீடு!
-
அமெரிக்க பள்ளியில் கத்திக்குத்து சம்பவத்தால் பரபரப்பு; 14 வயது மாணவர்கள் 3 பேர் காயம்
-
வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
மதத்தின் பெயரால் சலுகை அப்பட்டமான சந்தர்ப்பவாதம்
-
காங்., கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு
-
ஸ்டாலினுக்கு 'நோட்டீஸ்'