கிறிஸ்துவ மத பிளவிற்கு மொழி பிரச்னையே காரணம் பழ.நெடுமாறன் பேச்சு
மதுரை: கிறிஸ்தவ மதத்தில் பெரிய பிளவு ஏற்பட மொழிப் பிரச்னையே காரணம், என தமிழர் முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் பேசினார்.
தமிழக கோயில்களில் தமிழ் மொழியில் வழிபாடு என்பதை வலியுறுத்தி தமிழ் மொழி காவலர் இயக்கம் சார்பில் மதுரையில் கருத்தரங்கம் நடந்தது. தலைவர் லண்டன் முருகேசன் பிள்ளை தலைமை வகித்தார். சுழற்சங்க இயக்குநர் சோமசுந்தரம் முதலியார் முன்னிலை வகித்தார். கணேசன் வரவேற்றார்.
பழ.நெடுமாறன் முன்னிலை வகித்து பேசியதாவது: கிறிஸ்தவ மதத்தில் பெரிய பிளவு உண்டானதற்குக் காரணம் மொழிப்பிரச்னை மட்டுமே. கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் உலகமெங்கும் பரவியிருந்தது. ஆரம்பத்தில் லத்தீன் மொழியில் மட்டுமே பைபிள் இருந்தது. அனைத்து சர்ச்களிலும் வழிபாடுகள் லத்தீன் மொழியில் மட்டுமே இருந்தன. கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் தாய்மொழி வழிபாடு மறுக்கப்பட்டது. இதனால் பிற்காலத்தில் பிளவு ஏற்பட்டு, கிறிஸ்துவ கத்தோலிக்க மதம் சிறுத்துவிட்டது. தமிழக கோயில்களில் தமிழில் வழிபாடு என்பது அடிப்படை உரிமை என்றார்.
பேரூர் ஆதினம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதினம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், கவிஞர் இரா.இரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.