நேபாளத்தில் மாயமான 3 பேரை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
புதுச்சேரி: நேபாளத்தில் மாயமான புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேரை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ரங்கசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த டிராவல் ஏஜன்சி மூலம் 57 பேர் கொண்ட குழு நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றது. இந்த குழுவில் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த சுந்தரி, வைஷ்ணவி ராமசாமி, கீதா ராமசாமி ஆகியோர் 3 பேரும் சென்றனர்.
இவர்கள் 3 பேரும் கடைசியாக கடந்த 25ம் தேதி இரவு 9.30 மணிக்கு நேபாளம–சீன எல்லைக்கு அருகில் உள்ள சியாப்ருபேசி என்ற இடத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் மாயமான இந்த 3 பேரையும் கண்டுபிடித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பாதுகாப்பாக புதுச்சேரிக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.