'அம்மா, அப்பா என்ற இரட்டை பொறுப்பு எனக்கு பிடிக்கும்!': 'வட்டார மொழியால் தொழில் முனைவோர் ஆனேன்!'

மனைவி விவாகரத்து பெற்று சென்ற நிலையில், மகளை தனியாளாக வளர்த்து வரும், கோவையைச் சேர்ந்த அபிலாஷ்:

கடந்த 2009ல் எனக்கு திருமணம் ஆனது. ஆரம்ப நாட்களில் சந்தோஷத்திற்கு குறைவே இல்லை. ஒரு கட்டத்தில், வீட்டில் உள்ள பெரியவர்களால், எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்தன.

என் மனைவி, மேல்படிப்பிற்காக சென்னை கிளம்பினார். பிரச்னைகளை பெரிதாக்க வேண்டாம் என்று, நானும் என் வேலையை விட்டுவிட்டு, அவருடன் சென்னை சென்றேன்; அந்த நேரம் அவர் கருவுற்றார்.

மனைவியையும், அவரின் பெற்றோரையும் நானே பார்த்துக் கொண்டேன். ஆனால், அதுவே எனக்கு பிரச்னையாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. மனைவி, என்னை தவிர்க்க ஆரம்பித்தார்; எப்போதும், தன் பெற்றோருடனே இருந்தார். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த நொடி முதல், மகளே என் உலகமாக மாறினாள்.

எனக்கும், மனைவிக்கும் இடைவெளி பெரிதாக ஆரம்பித்தபோது மகளுக்கு, 3 வயதானது. மனைவி, 'துபாய்க்கு வேலைக்கு செல்கிறேன்' என்றார். 'இந்தியாவிலேயே வேலை தேடிக் கொள்ளலாம்' என நான் கூறியும், கேட்காமல் துபாய் சென்றார். நான் மகளுடன் கோவைக்கு வந்து விட்டேன்.

என் மகளின் 10வது வயதில், மனைவி விவாகரத்து கேட்டார். குழந்தை என்னிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் மகளும், 'அப்பாவிடமே இருக்கிறேன்...' என்று கூறினாள். 2023ல் எங்களுக்கு விவாகரத்து கிடைத்தது.

அம்மா மட்டுமே கொடுக்கக்கூடிய அன்பையும், அரவணைப்பையும் அப்பாவால் கொடுக்க முடியாது. ஆனால், என் மகள் பிறந்தது முதலே, அம்மாவாகவும் வாழ்ந்து பழகி விட்டேன்.

குழந்தையை வளர்ப்பது என்றுமே கஷ்டமாக தெரியவில்லை. என் சிறு வயது முதலே உடன் இருக்கும் தோழியர், நண்பர்கள் என பலரும் என் மகளை அருமையாக பார்த்துக் கொள்கின்றனர்.

இப்போது அவளுக்கு, 13 வயதாகிறது. யாராவது அம்மா குறித்து கேட்டால், 'அவங்க வெளிநாட்டில் இருக்காங்க. அம்மாவும், அப்பாவும் பிரிந்து விட்டனர். நான் அப்பாவுடன் இருக்கிறேன்' என்று கூறும் பக்குவம் மகளுக்கு உள்ளது.

என் மகளின் பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியம். எவரை நம்பியும் மகளை வெளியே அனுப்ப மாட்டேன். சுய பாதுகாப்பு குறித்தும் மகளுக்கு சொல்லி தருகிறேன்.

'இவ்வளவு பாசமாக வளர்க்கிறியே... நாளைக்கு திருமணம் செய்து கொடுக்கணுமே...' என்று, பலரும் கேட்கின்றனர். பிரிவு என்ற கற்பனையே வலிக்கிறது; ஆனாலும், அதுதான் எதார்த்தம்; ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்.

சுமக்க சிரமமாக இருந்தாலும், சில வலிகள் பிடிக்கும். அப்படித்தான் அம்மாவாக, அப்பாவாக இரட்டை பொறுப்பு சுமப்பதும் எனக்கு பிடித்தி உருக்கிறது.

'வட்டார மொழியால் தொழில் முனைவோர் ஆனேன்!'



அம்மி, உரல் போன்ற கல் பொருட்களை, 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்து, லட்சங்களில் சம்பாதிக்கும் திருநெல்வேலி, வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள்:

சொந்த ஊர் பேச்சு வழக்கே, என்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது. சமூக வலைதளங்களில் நான் பதிவிடும், என் வீட்டு சமையல் மற்றும் உணவு வகைகளின் காணொளிகளை எங்கள் ஊர் மொழியில் பேசியதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Latest Tamil News
குறிப்பாக, 'எளிய முறையில் உளுந்தங்களி செய்வது எப்படி?' என்ற காணொளியை, 77 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தற்போதும், என் தினசரி அனுபவங்களை பதிவிட்டு வருகிறேன்.

நான் பிளஸ் 2 முடித்து விட்டு, ஒரு சிற்ப கலைக்கூடத்தில் கணக்காளராக இரு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அப்போது, கருங்கற்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டேன்.

நான் பதிவிடும் காணொளிகளுக்கு பார்வையாளர்கள் அதிகம் கிடைத்ததால், கருங்கற்களால் ஆன பொருட்களை சமூக வலைதளம் வாயிலாக விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்து, 'கல்வா ஸ்டோர்ஸ்' என்ற பெயரில், 'ஆன்லைன்' கடை உருவாக்கினேன்.

ஆரம்பத்தில், 15,000 ரூபாய் முதலீட்டில், கல் பொருட்கள் விற்பனை செய்யும் என் நண்பரிடம் இருந்து கருங்கல்லில் செய்த அம்மி, இடி உரல், குழி உரல் போன்ற பொருட்களை வாங்கி, ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கினேன்.

இஞ்சி - பூண்டு இடிக்கும் சிறு உரல், மருந்து அரைக்கும் பவுல், முட்டை வடிவ உரல், சந்தனம், மஞ்சள் அரைக்கும் கல், அம்மி, ஆட்டு உரல் என பல பொருட்கள் கல்லில் உள்ளன. சுப நிகழ்ச்சிகளுக்கு பரிசாக தரவும் இதுபோன்ற பொருட்களை வாங்குகின்றனர். 150 முதல், 2,299 ரூபாய் வரையிலான பொருட்களை விற்பனை செய்கிறேன்.

தமிழகம் மட்டுமல்லாமல், வடமாநிலங்களில் இருந்தும், 'ஆர்டர்'கள் வரும். பெங்களூரில் இருந்து நிறைய ஆர்டர்கள் வருகின்றன. தினமும் 25 ஆர்டர்கள் வரை கிடைக்கும். ஒரு நாளைக்கு சராசரியாக 3,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது.

அதேநேரம், கருங்கல் பொருட்களை நீண்ட காலம் பயன்படுத்துவர் என்பதால், மறுமுறை வாங்குவோர் குறைவு தான். இதனால், புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறேன். குறைந்த முதலீட்டில் தொழிலை துவங்கினாலும், இப்போது லட்சங்களில் சம்பாதிக்கிறேன்.

சொந்த தொழில் தான் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் கொடுக்கும். சிறு முதலீட்டில் துவங்கினாலும் பரவாயில்லை... தொடர்ந்து முயற்சி செய்தால், வெற்றி நிச்சயம்; துணிந்து களத்தில் இறங்குங்கள்.

Advertisement