ரோட்டில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகள் தீ வைத்து எரிப்பு
சிவகாசி: சிவகாசி பகுதியில் ரோட்டில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகள், குப்பைகளில் தீ வைக்கும் சம்பவம் தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி பகுதியில் சாத்துார் ரோடு வெம்பக்கோட்டை ரோடு, திருத்தங்கல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பட்டாசு கழிவுகளை ரோட்டிலேயே கொட்டி விடுகின்றனர். இதனை அகற்றாமல் அப்படியே கிடப்பதால், இதில் யாரேனும் தீ வைத்து விடுகின்றனர். நேற்று முன் தினம் இரவு நாரணாபுரம் ஆர் சி காலனி பகுதியில் பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதில் மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதேபோல் சாத்துார் ரோட்டில் கோணம் பட்டி அருகே ரோட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் தீ வைக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே பட்டாசு கழிவுகளை ரோட்டில் கொட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.