விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு: போலீசார் ஆலோசனை  

வானுார்: கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் உள்ள மரக்காணம், ஆரோவில், வானுார், கிளியனுார் மற்றும் கோட்டக்குப்பம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விழா குழுவினர்களுடன் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் ஹரிகிருஷ்ணன், பாபு, வி்ஸ்வநாதன், பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டக்குப்பம் உட்கோட்ட டிஎஸ்பி. ரூபன்குமார் தலைமை தாங்கி பேசினார். இதில் விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்வது மற்றும் சிலைகளை கரைப்பது தொடர்பாக போலீஸ் துறை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கும், விழா குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement