தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு; அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவாதம்

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து பேசியதாவது: தூய்மை தொழிலாளர்கள் ரொம்ப பாவம்.

தூய்மை தொழிலாளர்கள் அல்ல; தூய்மை தேவதைகள். இரண்டு முறை நேரில் அழைத்து விரிவான ஆலோசனை நடத்தினோம். அதில் முதல் கூட்டத்தில் ஒரு தூய்மை தேவதை அக்கா கையை எல்லாம் காண்பித்தார்கள்.

போராட்டத்தில் போலீசாரின் தள்ளுமுள்ளுவில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்றார். உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசாரிடம் பேசினேன். எந்த காரணம் கொண்டு எந்த தூய்மை தேவதைகள் மீது பலப்பிரயோகம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டோம். அவர்கள் போராட இடம் கிடைக்காமல் தடுமாறி கொண்டு இருந்தார்கள். அவர்கள் போராட இடம் கொடுத்தோம். அது அவர்களின் உரிமை.

தூய்மை பணியாளர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவோம்; அவர்கள் உடைமாற்றும் கழிவறை உடன் கூடிய வசதி செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு கையுறை, மாஸ்க் எல்லாம் சிறப்பான முறையில் வழங்கப்படும்.

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவிற்கு பதிலாக உணவுப்படி வழங்க கோப்பு வங்கப்பட்டு அரசின் பரிந்துரையில் உள்ளது. விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும்.

தூய்மை பணியாளர் தேவதைகளின் பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை இவையனைத்தும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு வரும். அவர்கள் போராடுவதற்கு எந்த இடையூறும் இல்லாமல், போராடுவது அவர்களின் உரிமை, அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்ய வே ண்டியது எங்களது கடமை; விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். இவ்வாறு ராஜ்மோகன் பேசினார்.

Advertisement