நேபாளத்தில் இறந்த இந்தியர்களை அடையாளம் காணும் வழிமுறை: இந்தியத் தூதரகம் அறிவுரை
காத்மாண்டு: நேபாள பெரு வெள்ளத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகளை இந்தியத் தூதரகம் வெளியிட்டு உள்ளது. நேபாள போலீஸ் இணையதளத்தில் உறவினர்களின் புகைப்படங்கள் அல்லது டிஎன்ஏ விவரங்களை வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
100க்கும் மேற்பட்ட இந்தியர்களையும் காணவில்லை. அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. இறந்தவர்களின் பல உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், நேபாள அரசே அடக்கம் செய்து வருகிறது. அதற்கு முன்னர் அவர்களின் டிஎன்ஏவை மாதிரிகள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேபாளத்தில் இந்தியர்கள் இறந்திருந்தால் அவர்களின் உடலை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகளை இந்தியத் தூதரகம் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக நேபாளத்திற்கான இந்தியத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேபாள சட்டப்படி, வெளிநாட்டு பிரஜைகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகள் தேவைப்படும்.
இறந்தவர் பற்றிய விவரங்களை ஆவணப்படுத்துதல்
இறந்தவர்களின் புகைப்படங்களை பதிவு செய்தல்
பிரேத பரிசோதனை
மரணத்திற்கான காரணத்தை சரிபார்த்தல்
அடையாளங்களை முறையாக உறுதி செய்தல்
கைரேகை/ டிஎன்ஏ/ தடயவியல் மாதிரி சேகரித்தல்
இறந்தவரின் பாஸ்போர்ட் / அடையாள அட்டையை சரிபார்த்தல்
தூதரகம் வாயிலாக ஒங்கிணைப்பு மற்றும் உடல் ஒப்படைப்பு ரசீது பெறுதல்.
நேபாள காவல்துறையின் இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் இறந்தவர்களின் விவரங்கள் வாயிலாக உடலை, அவர்களின் உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் அடையாளம் கண்டுபிடித்தால், அதனை இந்தியா கொண்டுவருவதற்கான பணிகளுக்கு இந்தியத் தூதரகம் உதவி செய்யும்.
சுகாதார காரணங்களுக்காக பல்வேறு உடல்களை நேபாள அரசு அடக்கம் செய்துள்ளது. அத்தகைய உடல்களை பெற உறவினர்களின் டிஎன்ஏ பொருத்தம் தேவைப்படுகிறது. ஒரு வேளை உடலை அடையாளம் காண முடியாவிட்டாலும், உடல் தற்காலிகமாகஅடக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், டிஎன்ஏ பொருத்தம் செய்து சோதனை செய்ய நேபாள அரசு உதவும். இறந்தவர்களின் உடலில் இருந்து நேபாள அரசு டிஎன்ஏ மாதிரிகளை சேமித்து ஆவணப்படுத்தி உள்ளது .
இதனை ஒப்பிட்டு பார்க்க, இறந்தவர்களின் குடும்பத்தில் உருவர் டிஎன்ஏ விவரத்தை இமெயில் dnacodis@nepalpolice.gov.np வாயிலாகவும் அல்லது ரத்த மாதிரிகளை நேபாள அதிகாரிகள் கேட்கும் விவரத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவர் தங்களின் டிஎன்ஏ மாதிரிகளை, டிஎன்ஏ விவரங்களை இந்திய தூதரகத்தின் eoikathmandufloodsupport@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும் அனுப்பலாம். +977 9841 6160 95 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.