மின் கம்பத்தில் பைக் மோதி விபத்து :டி.வி.நல்லுார் அருகே 2 வாலிபர்கள் பலி
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலையோர மின் கம்பத்தின் மீது பைக் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் கார்த்திக் ராஜா, 19; தவில் வித்வான். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ராயர், 35; கூலித் தொழிலாளி.
இருவரும் நேற்று மாலை 5:30 மணியளவில் வீட்டிலிருந்து சிறுமதுரை நோக்கி ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றனர். பைக்கை கார்த்திக் ராஜா ஓட்டினார்.
சிறுமதுரை - பையூர் இடையே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மின் கம்பத்தில் மோதியது. பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.