38 உணவு நிறுவனங்களில் ஆய்வு

கோவை: உணவு பாதுகாப்பு துறை சார்பில், மூன்று மாதங்களுக்கு உணவகங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது. கோவையில் நேற்று, 38 நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இதில், துறை சார்பில் உணவகங்களுக்கு வகுப்பட்ட விதிகள் பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் கரப்பான் பூச்சி, ஈ போன்றவை இருந்ததோடு, பூச்சி கட்டுப்பாடு செய்யாமை, துருபிடித்த கத்தி பயன்படுத்தி உணவு தயாரித்தல், சமையலர்களின் மருத்துவ அறிக்கை இல்லாமை, சமைக்கும் இடம் சுத்தமாக பராமரிக்காமை உள்ளிட்ட காரணங்களால், மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய, சமைக்கும் இடம் சுத்தமாக பராமரிக்காத, தள்ளுவண்டி கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, தங்கள் பகுதியில் தரமற்ற உணவகங்கள் செயல்பட்டால், 94435 20332 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

Advertisement