அரசியல் பேச வேண்டாம்: தைலாபுரத்தில் அறிவிப்பு
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் தன்னை சந்திக்க வருபவர்கள் அரசியல் பேச வேண்டாம் என்ற அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த மோதல் சுமூகமான நிலையில், அரசியலில் இருந்து துறவறம் பூணுகிறேன். இனிமேல் அரசியலில் தலையிட மாட்டேன் என்ற அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார்.
அதன்பிறகு, நீண்ட நாட்களாக தைலாபுரம் தோட்டத்தில் பார்வையாளர்கள் சந்திப்பை தவிர்த்து வந்த ராமதாஸ் நேற்று 1ம் தேதி முதல் பார்வையாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நேற்று தைலாபுரம் தோட்டம் நுழைவு வாயிலில் நேற்று அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், 'தினமும் காலை 10:00 மணியிலிருந்து பிற்பகல் 12:00 மணி வரை பார்வையாளர்கள் சந்திக்கலாம். ராமதாஸ் ஏற்கனவே அறிவித்த படி அரசியலில் துறவறம் மேற்கொண்ட காரணத்தால், சந்திக்க வரும் பார்வையாளர்கள் நிறுவனரிடம் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக எப்போதும் காரசாரமாக அரசியல் கருத்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வந்த ராமதாஸ், தற்போது பார்வையாளர்கள் யாரும் அரசியல் பேச வேண்டாம் என அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.