எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு இறுதி மெரிட் லிஸ்ட் வெளியீடு போலி சான்றிதழ் கொடுத்த மாணவர்கள் நீக்கம்

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான இறுதி தரவரிசைப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., மற்றும் பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.ஹெச் சுயநிதி மற்றும் என்.ஆர்.ஐ., ஆகிய படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தெலுங்கு சிறுபான்மையினர் மற்றும் என்.ஆர்.ஐ., ஒதுக்கீடுகளுக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி தரவரிசை பட்டியலை பொருத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,620 பேர், நிர்வாக இடங்களுக்கு 4,750 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிக்கான இட ஒதுக்கீட்டில் 28 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இளநிலை நீட்  தேர்வின் கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த இறுதி தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவு தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து இரட்டை இருப்பிட உரிமை கோரிய 13 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் விண்ணப்பச் சரிபார்ப்பு நிலையைக் கண்டறிய, சென்டாக் இணையதளத்தில் உள்ள தங்களது டேஷ்போர்டு பக்கத்தில் லாக்-இன் செய்து தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்களுக்கு இதுகுறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன. கூடுதல் விவரங்கள் அறிய சென்டாக் இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது மாணவர் லாக்-இன் பக்கத்தில் உள்ள கிரீவன்ஸ் பகுதி மூலமாக கேள்விகளைப் பதிவிடலாம்.

மேலும், உதவிக்கு 0413-2655570 அல்லது 2655571 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement