புலி பிரச்னையால் வேலையும், வருவாயும் இல்லை; அரசு உதவியை எதிர்பார்க்கும் கிராம மக்கள்

கூடலுார்: கூடலுார் அருகே இருவரை தாக்கிய புலியை பிடிக்கும் பணியின் காரணமாக, லாரஸ்டன் கிராம மக்கள், வேலைக்கு செல்ல முடியாமல், வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

கூடலுார் லாரஸ்டன் பகுதியில் இருவரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் நிலையில் புலி இருப்பிடத்தை அறிய முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பணியின் காரணமாக, லாரஸ்டன் பகுதி கிராம மக்கள் பசுந்தேயிலை பறிக்க முடியாமலும், வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமல், 11 நாட்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 'ரெப்கோ' வங்கி, வியாபாரி சங்கங்கள் சார்பில் இவர்களுக்கு அரசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மக்கள் வருவாய் இன்றி பாதித்துள்ளனர்.

கிராம மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் சிலர் தேயிலை தோட்டங்கள் வைத்துள்ளனர். மற்றவர்கள் வெளியில் சென்று கூலி வேலை செய்து வருகின்றனர்.

புலி இருவரை தாக்கி கொன்றதை தொடர்ந்து அச்சமடைந்துள்ள மக்கள் கடந்த, 11 நாட்களாக கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. பசுந்தேயிலை கொள்முதல் செய்ய வாகனங்கள் வராததால், பசுந்தேயிலை வளர்ந்து காணப்படுகிறது.

இதனால், கிராம மக்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே, புலியை பிடிக்கும் வரை, எங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்,' என்றனர்.

Advertisement