மீன்வளத்துறை நிகழ்ச்சியில் எம்எல்ஏ வெளிநடப்பால் பரபரப்பு

புதுச்சேரி: மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தனக்கு இருக்கை அமைக்காததால் விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., வெளி நடப்பு செய்தார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தல் மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கான கூட்டுறவு கடல்பாசி வளர்ப்பு குறித்த பன்முகத்திறன் மேம்பாட்டு மாநாடு துவக்க விழா நடந்தது.

கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த விழாவில், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர், தற்காலிக சபாநாயகர், தலைமை செயலர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்ட ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., விக்னேஷ் கண்ணணுக்கு மேடையில் இருக்கை அமைக்கப்படவில்லை. ஆனால் என்.ஆர்.காங்., த.வெ.க., ல.ஜ.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., விழாவை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.

ஆதரவாளர்கள் மறியல் இதனிடையே விழாவில், பங்கேற்க சென்ற தி.மு.க., எம்.எல்.ஏ., விக்னேஷிற்கு மேடையில் இருக்கை ஒதுக்காததை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் நேற்று மாலை 4:30 மணிக்கு அஜந்தா சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியக்கடை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், எம்.எல்.ஏ.,விற்கு இருக்கை ஒதுக்காமல், அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கு, போலீசார் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், ஆஜந்தா சிக்னல் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்து, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

அரசுக்கு கண்டனம் விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., அறிக்கை:

புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில், புதிய திட்டங்களுக்கான துவக்க விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தனர். ஆனால், என்.ஆர்.காங்., த.வெ.க., ல.ஜ.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு மேடையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், எனக்கு மட்டும் மேடையில் இருக்கை இல்லை. எனது சுயமரியாதையையும், என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் கண்ணியத்தையும் காக்கும் வகையில், அங்கிருந்து வெளிநடப்பு செய்தேன்.

இது எனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை மட்டுமல்ல; நான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும். தொகுதி மக்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அரசின் இந்தப் பாரபட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Advertisement