கோயிலுக்குள் போன் கொண்டு செல்ல தடைக்கு வரவேற்பு!

20

மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோயிலில், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கும் திட்டம், நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோயில்களில், செப்., 1 முதல் பக்தர்கள் மொபைல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில், நேற்று முதல் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வந்தது.

இதற்காக, மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டு பாதையில், மொபைல்போன் பாதுகாப்பு அறையும், மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் ஒரு மொபைல் போன் பாதுகாப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரு போனுக்கு, 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, கோயில் இணையதளத்தில், பக்தரின் புகைப்படம், மொபைல் எண், எத்தனை மொபைல்போன்கள் ஒப்படைக்கப்படுகிறது என்ற விபரங்களை பதிவு செய்து, பக்தர்களுக்கு, ஒப்புகை சீட்டும் வழங்கப்படுகிறது. சீட்டின் நகலுடன், பக்தர்களின் போனை, லாக்கரில், கோயில் பணியாளர்கள் வைக்கின்றனர்.

தரிசனம் முடித்து வரும் பக்தர்கள், போன் திரும்ப பெறும் கவுன்டரில், ஒப்புகை சீட்டை கொடுத்தும், அந்த ஒப்புகை சீட்டின் டோக்கன் எண், பக்தரின் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, மொபைல் போனை ஒப்படைத்த நபரின் புகைப்படத்துடன், திரும்ப பெறும் நபரும் ஒருவர்தானா என்பதை உறுதி செய்த பின், போனை பணியாளர்கள் ஒப்படைக்கின்றனர்.

இந்த அறையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே, பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு, கோயிலில் மொபைல் போன்கள் இல்லாததால், அமைதியான சூழலில், சுவாமி தரிசனம் செய்து, தியானத்தில் ஈடுபட்டதும் காண முடிந்தது.

பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயில், பார்க்கிங் பகுதியில், மொபைல்போன் பாதுகாப்பு அறை அமைத்து மொபைல்போன் பெறப்படுகிறது.

மருதமலை கோயில் துணை கமிஷனர் விமலா கூறுகையில், போன் ஒப்படைப்பதற்கு 2 கவுன்டர்களும், திரும்ப பெறுவதற்கு 2 கவுன்டர்களும் உள்ளதால், பக்தர்களுக்கு வசதியாக உள்ளது.

இனி மெட்டல் டிடெக்டர் கொண்டு, ராஜகோபுரம் படிக்கட்டு பாதையில், மொபைல் போன் கொண்டு செல்கின்றனரா என்று சோதனை செய்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். விரைவில் ஆன்லைனிலும் கட்டணம் செலுத்தும் வசதி வரும் என்றார்.

Advertisement