தமிழக அரசு ரேஷனில் வெங்காயம் வினியோகத்தை அதிகரிக்குமா: அனைத்து கடைகளிலும் வழங்க மக்கள் எதிர்பார்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்புற கடைகளில் மட்டும் நேற்று முதல் பெரிய (பல்லாரி) வெங்காயம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிலோ ரூ.35க்கு வழங்கப்படுகிறது. அதிலும் நுகர்பொருள் வாணிபக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் வழங்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அனைத்து கடைகளிலும் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்ந்துள்ளதால் மக்களின் சுமையை குறைக்க தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பல்லாரி வெங்காயம் விற்பனை நேற்று முதல் துவங்கியுள்ளது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதற் கட்டமாக நேற்று பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட நகர்புறங்களில் உள்ள 72 ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ வீதம் வெங்காயம் வழங்கப்பட்டது.

ஒரு கடையில் 700 முதல் 900 கார்டுதாரர்கள் உள்ள நிலையில் சில கடைகளுக்கு 400 முதல் 600 கிலோ மட்டும் வந்தால் இருப்பு உள்ளவரை மட்டுமே வெங்காயம் வழங்கப்பட்டது.

அதன் பிறகு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் விபரம் தெரியாமல் விற்பனையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனவே கடைகளில் உள்ள கார்டுகளுக்கு ஏற்றவாறு வெங்காயம் வழங்க வேண்டும். குறிப்பாக நகர் மட்டுமின்றி கிராமங்களில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே வெங்காயம் வழங்கப்படுகிறது. டி.என்.எஸ்.டி.சி., கடைகளுக்கு கிடையாது.

நகரில் விடுப்பட்ட ரேஷன் கார்டுதார்களுக்கு வெங்காயம் அடுத்தடுத்த நாட்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்வது குறித்து அரசு தான் அறிவிக்க வேண்டும் என்றனர்.

Advertisement