218 நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை துவங்கியது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத் தில் 218 நகர்ப்புற ரேஷன் கடைகள் மூலம் 25 ஆயிரம் கிலோ வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மல்லாங்கிணர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35 விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணிகளை கலெக்டர் சுகபுத்ரா துவங்கி வைத்தார்.

மாவட்டத்தில் மக் களின் அன்றாட தேவையை கருத்தில் கொண்டு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 ஆயிரம் கிலோ வெங்காயம், மாவட்டத்தில் உள்ள 218 நகர்ப்புற ரேஷன் கடைகள் மூலம் நேற்று முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிலோ ரூ.35 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

அருப்புக்கோட்டையில் 28 ரேஷன் கடைகளுக்கு 3200 கிலோ, காரியாபட்டியில் 11 கடைகளுக்கு 1200 கிலோ, ராஜபாளையத்தில் 53 கடைகளுக்கு 6150 கிலோ, சாத்துாரில் 7 கடைகளுக்கு 650 கிலோ, சிவகாசியில் 49 கடைகளுக்கு 6450 கிலோ, ஸ்ரீவில்லிபுத்துாரில் 31 கடைகளுக்கு 3450 கிலோ, வத்திராயிருப்பில் 17 கடைகளுக்கு 1650 கிலோ, விருதுநகரில் 22 கடைகளுக்கு 2250 கிலோ என 218 நகர்ப்புற ரேஷன் கடைகளுக்கு 25 ஆயிரம் கிலோ வெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே நகர்ப்புற கார்டு தாரர்கள் அருகே உள்ள தங்களுக்கான ரேஷன் கடைகளில் ரூ.35 கொடுத்து ஒரு கிலோ வெங்காயத்தை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement