நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்கள்; மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு


சென்னை:நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23ம் தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்றனர். ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இவர்களில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர்.

நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, சென்னைக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Advertisement