தமிழக வீரர் மனோஜ் 'தங்கம்' * இந்திய தடகள ஈட்டி எறிதலில்...

மீரட்: இந்திய தடகள சீரிஸ், ஈட்டி எறிதலில் தமிழகத்தின் மனோஜ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்தியன் தடகள சீரிஸ் நடத்தப்படுகிறது. இதன் 15வது தொடர் உ.பி.,யின் மீரட்டில் நேற்று நடந்தது.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தமிழகத்தின் மனோஜ் குமார், ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 77.82 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆர்மி அணியின் பிபின் (73.94), உத்தரகாண்டின் விகாஷ் (73.07) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் ராஜஸ்தானின் ராம்சந்திர மாலி (15.91 மீ.,) தங்கம் வென்றார். 15.83 மீ., துாரம் எறிந்த தமிழக வீரர் பாலாஜி, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பஞ்சாப்பின் மால்கீட் சிங் (15.74) வெண்கலம் வசப்படுத்தினார்.
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் கேரளாவின் மிஜோ சாக்கோ குரியன் (46.89 வினாடி) தங்கம் வென்றார். தவிர 200 மீ., ஓட்டத்தில் இவர் (21.41) வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் தருண் விகாஷ், (7.48 மீ.,) வெள்ளி, சரண் (7.48 மீ.,) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

Advertisement