இந்தியாவில் பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி

துபாய்: பெண்களுக்கான முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் முதன் முறையாக பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ('டி-20') இலங்கையில் வரும் 2027, பிப். 14-28ல் நடக்க இருந்தது. ஜூலை 6ம் தேதிப்படி, தரவரிசையில் 'டாப்-6' இடத்தில் இருந்த இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் பங்கேற்க உள்ளன.
போட்டிகள் 'ரவுண்டு ராபின்' முறையில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள அணிகள் பைனலில் பங்கேற்கும்.
திடீர் மாற்றம்
இதனிடையே இலங்கை கிரிக்கெட் போர்டில், அரசின் தலையீடு காரணமாக, குழப்பமான சூழல் நிலவுகிறது. அரசின் தற்காலிக குழு, இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிக்கிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.
போட்டிகள் மும்பை, வதோதராவில் நடக்க உள்ளன.
ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,' இந்தியா, வங்கதேசம், தென் ஆப்ரிக்கா என மூன்று நாடுகள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியில் இந்தியாவில் தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement