மின் கசிவால் தீ விபத்து தனியார் பேக்கரி எரிந்தது
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தனியார் பேக்கரி முற்றிலும் எரிந்தது.
ஆர்.எஸ்.மங்கலம் பரமக்குடி ரோடு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள தனியார் பேக்கரியில் நேற்று அதிகாலை 3:50 மணிக்கு ஊழியர்கள் கடையை திறந்து, டீ, பலகாரங்கள் விற்பனை செய்வதற்கு தயாராகி உள்ளனர். அப்போது சில வாடிக்கையாளர்களும் பேக்கரிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், பேக்கரி உள்பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு லேசான தீப்பொறி ஏற்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் பேக்கரியை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் பேக்கரி முழுவதும் தீ பரவியது. அதைத் தொடர்ந்து ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். ஆர். எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) பிரான்சிஸ் அலெக்ஸ்சாண்டர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தீ அருகில் உள்ள பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் இரும்பு கடைக்கும் பரவியதால் திருவாடானை பகுதியில் இருந்து கூடுதலாக இணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதனால் அருகில் இருந்த ஜவுளிக்கடை, மெடிக்கல் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
பேக்கரி மற்றும் இரும்பு கடையில் தீ விபத்தின் காரணமாக ரூ.20 லட்சத்தில் பொருட்கள் சேதமடைந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ஆர்.எஸ். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
––