பழங்குடியினருக்கு ‘வார்லி’ ஓவிய பயிற்சி மறைந்து வரும் கலையை மீட்கும் முயற்சி
பந்தலுார்: பந்தலுாரில் மறைந்து வரும் பழங்குடியின ஓவியங்களுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில், பெண்களுக்கு ஓவியம் வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நீலகிரியில் வாழும் பழங்குடிகளின் ஓவியங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. அதில், துணிகளில் வரையப்படும், ‘டிரைபல் பேப்ரிக் பெயிண்டிங்’ முறையில், அவர்களின் வாழ்க்கை முறை, இயற்கை, விவசாயம் மற்றும் விலங்குகள், சடங்குகள் வெளிப்படுகிறது.
அதில், ‘வார்லி ஓவியம், கோண்ட் ஓவியம், மதுபானி ஓவியம், சவுரா ஓவியம்’ ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றில் பல ஓவியங்கள் குறித்து தற்போதைய பழங்குடி சந்ததியினர் ஆர்வம் காட்டாததால், அவை அழிந்து வருகின்றன.
இதனை மீட்டெடுக்கும் முயற்சியில், பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சங்கீதா ஈடுபட்டு, பழங்குடியின பெண்களுக்கு ஓவிய பயிற்சி அளித்து வருகிறார். அதில், புடவை; வேஷ்டிகளில், பழங்குடியினர் நடனம், வாழ்க்கை முறை, வரைவதற்கு பயிற்சி கொடுப்பதால் பழங்குடி பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
சங்கீதா கூறுகையில், ‘‘ பழங்குடியின பெண்களுக்கு அவர்களின் கலாச்சாரங்கள் சார்ந்த, ஓவியம் மட்டுமின்றி, பல்வேறு கலை பொருட்களை உருவாக்கவும் பயிற்சி அளித்து வருகிறேன். குறிப்பாக, பழங்குடியின மக்கள் மறந்து வரும் ஓவியங்கள் குறித்து, அவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். இதனை அவர்கள் வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால் பயன் ஏற்படும்,’’ என்றார்.