வரும் சீசனில் எள் விலை அதிகரிக்கும்! வேளாண் பல்கலை., கணிப்பு  

உடுமலை: வரும் அறுவடை சீசனில் எள்ளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு விலை முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்., பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் வாயிலாக, வேளாண் விளைபொருட்களுக்கான விலை முன்னறிவிப்பு சந்தை விலை நிலவரங்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அவ்வகையில், வரும் அறுவடை சீசனில், எள் விலை நிலவரம் குறித்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த, 25 ஆண்டுகளாக நிலவிய எள் விலையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், நல்ல தரமான கருப்பு எள்ளின் அறுவடை விலை கிலோ, ரூ.140 முதல் ரூ.145 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உலக அளவில் எள் உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. நாட்டில் ஆண்டுக்கு சுமார், 8.7 லட்சம் டன் எள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திலும் காரீப் மற்றும் ராபி பருவங்களில் எள் சாகுபடி நடைபெற்று வருகிறது.

பருத்திக்கும் வாய்ப்பு உலக அளவில் பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது. பருத்தி சாகுபடி பரப்பளவில் உலக அளவில் முதலிடத்திலும், உற்பத்தி மற்றும் நுகர்வில் 2-வது இடத்திலும் இந்தியா உள்ளது.

இந்தியாவில், 2025--–26ம் ஆண்டில் சுமார், 114.82 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 49.455 லட்சம் டன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக, 431 கிலோ மகசூல் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பளவு, 1.02 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. 2024–-25ல், 3.80 லட்சம் டன் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டதுடன், ஒரு ஹெக்டேருக்கு, 350 கிலோ மகசூல் கிடைத்துள்ளது.

வரும் அறுவடை சீசனில் நல்ல தரமான பருத்திக்கு, ரூ.75–80 வரை விலை கிடைக்கும். இதை அடிப்படையாகக்கொண்டு விற்பனை முடிவுகளை விவசாயிகள் எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement