யு.டி.ஐ.டி. அட்டைக்கு நடத்துனர்கள் ‘நோ’ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார்
உடுமலை: யு.டி.ஐ.டி. கார்டு வைத்திருந்தாலும், பழைய புத்தக வடிவ அடையாள அட்டையை கேட்பதால், அரசு பஸ்களில் பயணிப்பதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், தமிழக முதல்வர் விஜய் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலருக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தக வடிவிலான அடையாள அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டு, மத்திய அரசு சார்பில் டிஜிட்டல் ஸ்மார்ட் கார்டான யு.டி.ஐ.டி. அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம், சில நடத்துனர்கள் யு.டி.ஐ.டி. கார்டை ஏற்க மறுக்கின்றனர். காலாவதியான பழைய புத்தக வடிவ அடையாள அட்டையையே கேட்பதாக புகார் உள்ளது.
யு.டி.ஐ.டி. கார்டு மட்டுமே வைத்திருந்து, பழைய புத்தக வடிவ அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளை நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கிவிடுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் பயணிக்கும்போது, யு.டி.ஐ.டி. கார்டு அல்லது அதன் நகலை மொபைல்போன் திரையில் காண்பித்தால், அதனை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து அரசு பஸ் நடத்துனர்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.