கிடைக்குமா அழகப்பா பள்ளிக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு: ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனி

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலையின் கீழ் செயல்படும் அழகப்பா மாதிரி பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகி உள்ளதாக பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் சமூக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்திலேயே பல்கலையின் கீழ் செயல்படும் ஒரே பள்ளி காரைக்குடியில் செயல்பட்டு வரும் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியாகும். ஏழை மாணவர்களுக்காக 1951ம் ஆண்டு அழகப்பா மாதிரி பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு ஆயிரத்து 300 மாணவர்கள், 38 ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வை அறிவித்தது. 2016 ஆம் ஆண்டு நீட் தேர்வு கட்டாய சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில் 2017-=- 18 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நீட் தேர்வு இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில் அழகப்பா பல்கலையின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் அரசின் இட ஒதுக்கீட்டில் இடம் பெற முடியாத நிலை உள்ளது. அரசு பல்கலையான அழகப்பா பல்கலையின் கீழ் செயல்படும் பள்ளிக்கு, அரசு பள்ளிக்கான இட ஒதுக்கீடு வழங்காதது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் என முன்னாள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி முன்னாள் மாணவர் ஸ்ரீதரன் கூறுகையில்;

ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்றும் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் அதிகம் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சிறந்து விளங்குகிறது. அரசுப் பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏராளமான ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் தங்களது மருத்துவ படிப்பை நனவாக்கி வருகின்றனர். ஆனால் ஒரு அரசு பல்கலையின் கீழ் இயங்கும் பள்ளிக்கு அரசுப்பள்ளி அங்கீகாரம் அளிக்காதது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அழகப்பா மாதிரி பள்ளிக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரிடமும் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்கள் அரசு உதவி பெறும் பள்ளியாகவே பார்க்கின்றனர். எனவே அழகப்பா பல்கலையின் கீழ் இயங்கும் அழகப்பா மாதிரி பள்ளிக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement