பல்கலையில் காத்திருப்பு போராட்டம் அமைச்சர் பேச்சுவார்த்தை
சிதம்பரம்;சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக் கூட்டமைப்பினரிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் ஓய்வூதியம் கோரியும், தொகுப்பூதியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19 ம் தேதி முதல் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். வரும் 9ம் தேதி சிதம்பரத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் ராஜ்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக் கூட்டமைப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பல்கலைக்கழக சிண்டிகேட் அரங்கில் நடந்த பேச்சுவார்த்தையில். துணைவேந்தர் ஒருங்கிணைப்பு உறுப்பினர் அறிவுடை நம்பி, பதிவாளர் சிங்காரவேலு, டி.ஆர்.ஓ., ஜெகதீஷ்வரன், கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், இணை ஒருங்கிணைப்பாளர் ரவி, பில்தேவ் மற்றும் முன்னாள் ஊழியர் சங்க தலைவர்கள் மதியழகன், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில், கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் ராஜ்குமார், தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி வரும் 8 ம் தேதி தெரிவிப்பதாக கூறினார். மேலும் ஓய்வூதியம் உடனடியாக வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
அதனையடுத்து, அமைச்சரிடம் அறிவிப்பு வரும் வரை தங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ஜாக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பரமணியன் அறிவித்தார்.