ஹிந்து கோவில்களில் தொடர் சிலை திருட்டு; ஹிந்து முன்னணி கடும் கண்டனம்

சென்னை: தமிழகத்தில், இந்து கோவில்களில் தெய்வத் திருமேனிகள் தொடர்ந்து திருடப்படும் விவகாரத்தில், த.வெ.க., அரசு அலட்சியமாக உள்ளதென பா.ஜ.,வும், ஹிந்து முன்னணியும் குற்றம்சாட்டியுள்ளன.

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, பெருங்கரணை தண்டாயுதபாணி கோவிலில், விலைமதிப்பற்ற மரகத முருகர் சிலை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது, பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில், தொடர்ந்து இந்து கோவில்களில் உள்ள சிலைகள் திருடப்படுவது, முதல்வர் விஜய் அரசின் அறநிலையத் துறை மற்றும் காவல் துறையின் ஒட்டுமொத்த தோல்வியையே காட்டுகிறது.

சட்டசபையில் சபாநாயகர் பைபிள் வசனங்களை வாசிக்கிறார். நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வலம் வருகிறார். இதன் வழியே, முதல்வர் விஜயின் அரசு, கிறிஸ்துவ மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து, ஒருதலைபட்சமாக செயல்படுவது அப்பட்டமாகிறது.

அதேநேரம், இந்து கோவில்களில் சர்வ சாதாரணமாக திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.
இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படும்போது, கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான், த.வெ.க., அரசின் மாற்று அரசியலா?

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணையில் உள்ள நடுபழநி மரகத தண்டாயுதபாணி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.5 அடி உயர மரகத முருகர் திருமேனி திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்த போலீசார், அந்த மரகத திருமேனி, 3 லட்சம் ரூபாய் செலவில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது என அவசர கதியில் தெரிவித்துள்ளனர். இது வேண்டுமென்றே கோவில் சிலை திருட்டின் முக்கியத்துவத்தை குறைக்கிறது.

சில ஆண்டுக்கு முன், காணாமல் போன, ராணிபேட்டை மாவட்டம் சிறுகரும்பூர் கோவில் மரகதலிங்கம் இதுவரை மீட்கப்படவில்லை. இதற்கெல்லாம், அறநிலையத்துறையின் அலட்சியமே காரணம்.

ஏற்கனவே, கோவில் பொருட்கள், திருமேனிகள் முதலானவை கடத்தப்பட்ட வழக்குகளில், குற்றவாளிகளுக்கு துணை போன அதிகாரிகள் மீது, கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, தமிழக அரசு உடனடியாக சிலை திருட்டு தடுப்பு பிரிவை வலுப்படுத்தி, சம்பந்தப்பட்டோரை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement