ஓவியப் போட்டியில் உலக சாதனை கவர்னரிடம் வாழ்த்து
புதுச்சேரி: இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்பு, பிட் இந்தியா சார்பில் நடந்த ஓவியப் போட்டி மூலம் பெற்ற உலக சாதனை பதிவு சான்றிதழை கவர்னர் கைலாஷ்நாதனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்பு, பிட் இந்தியா சார்பில், ஆண்டுதோறும் குழந்தைகள் மத்தியில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உடல் தகுதியை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய அளவிலான ஓவியப் போட்டிகளை நடத்தி வருகிறது.
இத்தாண்டு புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநிலங்களில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 1ம் தேதி நடந்த போட்டிகளில் ஒரே நேரத்தில் 17,359 மாணவர்கள் பங்கேற்று தங்களது கலைத் திறமையை வெளிப்படுத்தினர்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்ததை அங்கீகரிக்கும் வகையில், மலேசியாவை சேர்ந்த ‘வேர்ல்ட் யூத் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ அதனை உலக சாதனையாக பதிவு செய்துள்ளது.
அந்த உலக சாதனை பதிவு சான்றிழை இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்பு தலைவர் விமல், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.