நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த கடிதம்: 'முதல்வரின் முகவரி'யில் இருந்து வந்த பதில் நிலத்தடி நீர் செறிவூட்டும் இயக்கம் மகிழ்ச்சி
பல்லடம்: முதல்வரின் முகவரி பிரிவிலிருந்து கிடைத்த பதில் கடிதம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளதாக, பல்லடம் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் கோரும் இயக்கம் தெரிவித்துள்ளது.
பல்லடம் வட்டாரத்தை வறட்சியின் பிடியில் இருந்து மீட்கும் முயற்சியாக, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் கோரும் இயக்கம் துவங்கப்பட்டது. கே.அய்யம்பாளையம், கோடங்கிபாளையம் மற்றும் செம்மிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வேலுசாமி, பழனிசாமி மற்றும் புண்ணியமூர்த்தி ஆகியோர் இந்த இயக்கத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
அதன்படி, பல்லடம் வட்டாரத்தை வறட்சியில் இருந்து மீட்க ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து தொழில் துறையினர், விவசாய சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் என, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, திட்டம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு, அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். இச்சூழலில், தமிழக முதல்வரின் முகவரி பிரிவிலிருந்து, பல்லடம் நீலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.
இது குறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி கூறியதாவது:
நிலத்தடி நீர் செறிவூட்டும் இயக்கம் சார்பில், அனைத்து தரப்பினரிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின்படி, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பல்லடத்தை வளமாக்க ஏதாவது ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, முதல்வரின் முகவரி பிரிவுக்கு கடிதம் அனுப்பினோம். தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று சாதகமான பதில் வழங்கி உள்ளது.
அதன்படி, நீரியல், தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சாத்தியக்கூறுகள் இருப்பின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பதில் கிடைத்துள்ளது, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, இத்திட்டத்தை செயல் வடிவத்துக்கு கொண்டுவர அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.