மாணவர்களுக்கு இடையே மோதல்: போலீசாரை கண்டித்து மறியல் 

விழுப்புரம்: இரு தரப்பு மோதல் சம்பவத்தில், ஒரு தரப்புக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதை கண்டித்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே உள்ள தெளி மற்றும் சிறுவாக்கூர் கிராம மாணவர்களிடையே, நேற்று முன்தினம் மாலை பஸ்சில் சென்றபோது வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரவு அந்த மாணவர்களுக்குள் தாக்கிக்கொண்டனர். இதில், சிறுவாக்கூர் கிராமத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் பிரபாகரன்,17; காயமடைந்தார்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் நேற்று மாலை தெளி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சிலரை அழைத்து சென்று போலீஸ் ஸ்டேஷனில், வைத்து விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து, காணைக்கு திரண்டு வந்த தெளி கிராம மக்கள், ஒரு தரப்புக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி, இரவு 8:45 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதோடு, எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்த புகார்களின் பேரில், இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement