ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.,க்கள் சலுகைகள் ரத்து?
-சிறப்பு நிருபர் -
அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்கள், பதவி நீக்க நடவடிக்கைகளை தவிர்க்க ராஜினாமா செய்தால், அவர்களுக்கான சலுகைகள் மற்றும் ஓய்வூதிய உதவிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'அரசியலமைப்பு சார்ந்த பதவியில் உள்ளவர்கள், பதவி நீக்க நடவடிக்கையை தவிர்க்க ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவர்களுக்கான அனைத்து விதமான உதவிகள், சலுகைகள், வசதிகள் மற்றும் ஓய்வூதிய பலன்களை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி, பிரதிக் வீரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: பதவி நீக்க நடவடிக்கைகள் அல்லது நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில், ராஜினாமா செய்யும் அரசியலமைப்பு சார்ந்த பதவியில் உள்ளவர்கள், தாங்கள் வகித்த அந்த பதவியுடன் தொடர்புடைய சலுகைகள் மற்றும் பிற வசதிகளை பெற தகுதியற்றவர்கள் ஆவர்.
பதவி நீக்க நடவடிக்கைகளை தவிர்க்கவே, இவர்கள் ராஜினாமா செய்கின்றனர் என்ற பொதுவான கருத்து மக்களிடையே நிலவுகிறது. ராஜினாமாவுக்கு பின்னரும், தங்கள் பதவிக்கு தொடர்புடைய சலுகைகள் மற்றும் வசதிகளை அவர்கள் தொடர்ந்து பெறுகின்றனர். இது, அரசியலமைப்புக்கு முரணானது.
அரசியலமைப்பு சார்ந்த பதவியில் உள்ளவர்கள், தங்கள் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வதன் வாயிலாக, பொது வாழ்வில் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், நாட்டிற்காக பணியாற்றும் மற்ற ஊழியர்களை போலவே, பதவி நீக்க நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.
எனவே, அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலத்தை ராஜினாமா செய்யும் அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களுக்கு, சலுகைகள் அல்லது வசதிகள் வழங்கப்படக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், 'சாதாரண அரசு ஊழியர்கள் அல்லது அரசியலமைப்பு சாராத பதவி வகிப்பவர்கள் மீது, துறைரீதியான விசாரணையோ அல்லது பதவி நீக்க நடவடிக்கையோ நிலுவையில் இருந்தால், அவர்கள் ராஜினாமா செய்ய சட்டத்தில் அனுமதி இல்லை. ஆனால், அவர்களை விட மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அரசியலமைப்பு நிர்வாகிகள் மட்டும் விசாரணைக்கு பயந்து, எளிதாக ராஜினாமா செய்துவிட்டு தப்பிப்பது நியாயமற்றது.
'பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல், பதவி நீக்கத்திற்கு பயந்து, பாதியிலேயே விலகும் நபர்களுக்கு முழு சலுகைகளையும் வழங்கும் விதிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்' என, வாதிட்டனர்.
இதையடுத்து, இந்த மனு குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.