இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
புதுடில்லி: ஆசிய விளையாட்டில் 768 பேர் கொண்ட இந்திய அணியினர் பங்கேற்க உள்ளனர்.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. 45 நாடுகளில் இருந்து, 43 விளையாட்டுகளில் 17,000 பேர் பங்கேற்க உள்ளனர். கடந்த 2023 ஆசிய விளையாட்டில் இந்தியா, எப்போதும் இல்லாத வகையில் 107 பதக்கம் (28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்) வென்றது.
இம்முறை, இந்தியா சார்பில் 35 விளையாட்டில் 272 வீரர், 231 வீராங்கனைகள் என 503 பேர் களமிறங்குகின்றனர். தவிர, பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் உட்பட 246 பேர், அணித் தலைவர் சாதேவ் யாதவ் உட்பட 19 பேர் என மொத்தம் இந்தியா சார்பில் 768 பேர் கொண்ட படை களமிறங்குகிறது.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து (பாட்மின்டன்), மனு பாகர் (துப்பாக்கிசுடுதல்), லவ்லினா (குத்துச்சண்டை), மீராபாய் சானு (பளு துாக்குதல்), ஜோதி (100 மீ., தடை ஓட்டம்), பூஜா சிங் (உயரம் தாண்டுதல்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
வைபவ் வருகை
கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனாக இந்தியா பங்கேற்கிறது. பயிற்சியாளர் லட்சுமண், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான அணியில் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் 32 வயது அனுபவ வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வரை இடம் பெற்றுள்ளனர். பெண்கள் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக உள்ளார். ஸ்மிருதி மந்தனா, தீப்தி என அனுபவ வீராங்கனைகள் உள்ளனர்.
ஒலிம்பிக் வாய்ப்பு
ஆண்கள் ஹாக்கி அணிக்கு ஹர்மன்பிரீத் சிங், பெண்கள் அணிக்கு சலிமா கேப்டனாக உள்ளனர். இரு அணிகளும் தங்கம் வெல்லும் பட்சத்தில் வரும் 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம்.
தடகளத்தில் அதிகம்
அதிகபட்சமாக தடகளத்தில் 20 பயிற்சியாளர்கள் உட்பட 79 பேர் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஒலிம்பிக் ஹீரோ நீரஜ் சோப்ரா விலகிய நிலையில், இவருக்குப் பதில் ஈட்டி எறிதலில் யாஷ்விர் சேர்க்கப்பட்டார்.
தமிழக நட்சத்திரங்கள்
ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), ராஜேஷ் ரமேஷ், விஷால் (400 மீ.,), சந்தோஷ் குமார் (400 மீ., தடை ஓட்டம்), வித்யா (400 மீ.,), அபிநயா (4*100 மீ.,), பவானி தேவி (வாள் சண்டை), விஷ்ணு சரவணன், நேத்ரா (பாய்மர படகு), வேலவன் செந்தில்குமார், ஜோஷ்னா (ஸ்குவாஷ்), பெனெடிக்சன் ரோகித, தனுஷ் சுரேஷ் (நீச்சல்), சத்யன் (டேபிள் டென்னிஸ்), தக்சினேஸ்வர், அனிருத், ஸ்ரீராம் பாலாஜி (டென்னிஸ்), முத்துச்சாமி (வாலிபால்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.