அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா

துபாய்:ஆசிய கோப்பை அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாச, 137 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வென்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ('டி-20') 10வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஹாங்காங் அணி கேப்டன் நடாஷா மைல்ஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்: இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேரி சான், மரினா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த மந்தனா, மரியம் பிபி வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஷபாலி, மரினா வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன் விளாசினார். 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் இந்திய அணி 60/0 ரன் எடுத்திருந்தது. ருசிதா வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஸ்மிருதி. முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது ருசிதா பந்தில் ஷபாலி (28) அவுட்டானார்.

ஸ்மிருதி அபாரம்: இக்ரா சாஹர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மிருதி, சர்வதேச 'டி-20' அரங்கில் தனது 36வது அரைசதத்தை பதிவு செய்தார். பிரதிகா ராவல் (10) சோபிக்கவில்லை. மரியம் பிபி வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார் ஸ்மிருதி, ஜாய்லின் கவுர் வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் (11) நிலைக்கவில்லை.
மரினா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஸ்மிருதி, 58 பந்தில் சதம் கடந்தார். அபாரமாக ஆடிய இவர், ருசிதா வீசிய 18வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்டார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (10) ஏமாற்றினார். ஸ்மிருதி (124 ரன், 7X6, 14X4) 'ரன்-அவுட்' ஆனார்.


இந்திய அணி 20 ஓவரில் 193/5 ரன் எடுத்தது. பாரதி (2), தீப்தி சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஹாங்காங் சார்பில் மரினா 2 விக்கெட் வீழ்த்தினார்.


தீப்தி அசத்தல்: கடின இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி 16.2 ஓவரில் 56 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கேப்டன் நடாஷா மைல்ஸ் (15), மரினா (14) ஆறுதல் தந்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, நந்தினி, ஸ்ரீசரணி, பிரேமா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். முதல் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது.


தீப்தி முதலிடம்

'சுழலில்' அசத்திய இந்தியாவின் தீப்தி சர்மா, சர்வதேச 'டி-20' அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த வீராங்கனையானார். இதுவரை 151 போட்டியில், 174 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அடுத்த இடத்தில் தாய்லாந்தின் திபாச்சா புத்தவோங் (173 விக்கெட், 110 போட்டி) உள்ளார்.

'நம்பர்-1' வீராங்கனை

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன் குவித்த வீராங்கனை ஆனார் இந்தியாவின் ஸ்மிருதி. இதுவரை 10,880 ரன் (டெஸ்ட்-788, ஒருநாள்- 5411, சர்வதேச 'டி-20'-4681 ரன்) எடுத்துள்ளார். இந்தியாவின் மிதாலி ராஜ் (10,868 ரன்) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (10,740) உள்ளார்.

இரண்டு சதம்

சர்வதேச 'டி-20' அரங்கில் 2 சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனையானார் ஸ்மிருதி மந்தனா. ஏற்கனவே ஹர்மன்பிரீத் கவுர், ஒரு சதம் அடித்திருந்தார்.

* இது, சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனாவின் 18வது சதம். இவர் டெஸ்டில் 2, ஒருநாள் போட்டியில் 14, சர்வதேச 'டி-20'ல் 2 சதம் அடித்துள்ளார்.

இது அதிகம்

பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீராங்கனையானார் ஸ்மிருதி மந்தனா (124). இதற்கு முன் இலங்கையின் சமாரி 119* ரன் (எதிர்: மலேசியா, 2024, தம்புலா) எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக முறை, ஒரு இன்னிங்சில் 50 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தை இந்தியாவின் மிதாலியுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்மிருதி மந்தனா. இருவரும் தலா 93 முறை இப்படி ரன் விளாசினர். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ட்ஸ் (80 முறை) உள்ளார்.

சூப்பர் ஜோடி

பெண்களுக்கான சர்வதேச 'டி-20' அரங்கில், அதிக முறை 50 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த ஜோடிகள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை 29 முறை இப்படி சாதித்தது. அடுத்த இடத்தில் யு.ஏ.இ., அணியின் ஈஷா, தீர்த்தா ஜோடி (23 முறை) உள்ளது.

Advertisement