இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்

துபாய்: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ள பெண்கள் ஆசிய கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் (செப். 5) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி (ஐ.சி.சி., ரேஙகிங்கில் 'நம்பர்-3') ஏற்கனவே தாய்லாந்து, ஹாங்காங்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் எளிதாக நுழைந்தது.


மந்தனா 'மேஜிக்': துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா (2 போட்டி 143 ரன், 'ஸ்டிரைக் ரேட்' 193.24), ஷபாலி வர்மா (92 ரன், 'ஸ்டிரைக் ரேட்' 173.58) அருமையான 'பார்மில்' இருப்பது பலம். ஹாங்காங் அணிக்கு எதிராக சதம் விளாசிய மந்தனா, பல சாதனைகள் படைத்தார். துபாய் ஆடுகளத்தை கணிப்பது கடினம். குறைந்தது 10 பந்துகள் தாக்குப்பிடித்து, பின் விளாச வேண்டும். இதை உணர்ந்து மந்தனா, ஷபாலி விளையாடினர். இவர்களது ரன் மழை இன்றும் தொடரலாம். 3வது இடத்தில் வரும் பிரதிகா, 'டி-20' போட்டிக்கு ஏற்ப, விரைவாக ரன் சேர்க்க வேண்டும். 'மிடில் ஆர்டரில்' ரிச்சா கோஷ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அசத்தினால், இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம்.

'வேகத்தில்' நந்தினி சர்மா (5 விக்.,), கிராந்தி கவுட், 'சுழலில்' தீப்தி சர்மா (6 விக்.,) மிரட்டலாம்.


பாத்திமா பலம்: பாகிஸ்தான் அணி ('நம்பர்-8') முதல் போட்டியில் தாய்லாந்தை வென்றது. பேட்டிங்கில் தடுமாறுகிறது. துவக்க வீராங்கனை முனீபா அலி (1 போட்டி, 54 ரன்), 'ஆல்-ரவுண்டர்' கேப்டன் பாத்திமா சனாவை அதிகம் சார்ந்துள்ளது. பந்துவீச்சில் சாடியா இக்பால் (3 விக்.,) கைகொடுக்கலாம்.

இந்திய 'ஆல்-ரவுண்டர்' தீப்தி சர்மா கூறுகையில்,''அணியின் பேட்டிங், பவுலிங் வலுவாக உள்ளது. ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்படுகிறோம். ஆசிய கோப்பை உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக வென்ற போட்டிகளில், நாம் ஒரு படி முன்னிலையில் இருப்பது வழக்கம். மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்,''என்றார்.


யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 17 'டி-20' போட்டிகளில் மோதின. இந்தியா 14, பாகிஸ்தான் 3ல் வென்றன.


* ஆசிய கோப்பை 'டி-20' அரங்கில் 6 முறை மோதின. இந்தியா 5, பாகிஸ்தான் 1ல் வென்றன.

* துபாய் ஆடுகளம் 'ஸ்பின்னர்'களுக்கு சாதகமானது.

* துபாயில் மழைக்கு வாய்ப்பு இல்லை.



ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி அபாரம்

துபாயில் நடந்த ஆசிய கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), இந்தோனேஷியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி பீல்டிங் தேர்வு செய்தது.

கேப்டன் சகாரினி அதிகபட்சமாக 39 ரன் எடுத்து ஆறுதல் தர இந்தோனேஷியா 19.4 ஓவரில் 73 ரன்னுக்கு சுருண்டது.

யு.ஏ.இ., அணிக்கு ஈஷா (30), ரினிதா (22) கைகொடுக்க, 13.1 ஓவரில், 75/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வென்றது.

Advertisement