அடிப்படை வசதி செய்து தருவதில் மெத்தனம் மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம்

மீஞ்சூர்: அடிப்படை வசதிகளை செய்து தருவதில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், வரவு - செலவு கணக்குகளை கவுன்சிலர்களுக்கு வழங்குவதில்லை என்றும் கூறி, மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், சரிவர மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக, கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நேற்று பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தி.மு.க., - வி.சி. , - காங்., கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, திடீர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

கடந்த ஆறு மாதங்க ளாக, மாதாந்திர கூட்டம் முறையாக நடத்துவதில்லை. வரவு - செலவு கணக்குகளும் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாதாந்திர கூட்டம் நடந்தால் தான், பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து தெரிவித்து தீர்வு காண முடியும்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில், பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. வடிகால்வாய்களை துார்வார இயந்திரங்கள் கேட்டாலும் தருவதில்லை.

பேரூராட்சியில், ஏழு கோடி ரூபாய் வரை நிதி ஆதாரம் இருந்தும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. எவ்வித பணிகளும் நடைபெறாமல், மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement