ஸ்ரீநகரில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து; காயமின்றி தப்பிய பயணிகள்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம், அங்குள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது; நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் வந்த இண்டிகோ விமானம் , ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரைமிறங்கியது. அப்போது, விமான நிறுத்துமிடம் எண் 06ல் விமானம் நிறுத்தப்படும்போது, அங்குள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்ந்து நடந்து வருகிறது,

கடந்த 24 மணி நேரத்தில் இண்டிகோ விமானம் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக, தோஹாவிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற இன்டிகோ விமானம் விமானி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மஸ்கட்டுக்குத் திசைதிருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.

Advertisement