ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி; மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை

புதுடில்லி: கடந்த மாதம் தாறுமாறாக இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி, போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளதாக விமான விபத்து விசாரணை ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது.

தென் கிழக்காசிய நாடான தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து, டில்லிக்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் பறந்த போது, 300 அடிக்கு திடீரென கீழே இறங்கியது. இதில் பயணியர், பணிப்பெண்கள் என, 20 பேர் காயமடைந்தனர். விசாரணையில், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, விமானிகளுக்கு போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சோதனை நடத்தப்பட்டது. அதில், தலைமை விமானி கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

இதையடுத்து, அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்தது. சமீபத்தில் நடந்த முதற்கட்ட பரிசோதனையில், இரு விமானிகளின் மாதிரிகளில் சந்தேகத்திற்கிடமான முடிவுகள் வந்தன. உடல்நலக்குறைவால் மருந்து உட்கொண்டாலும் இத்தகைய நிலை ஏற்படும் என்பதால், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பதை உறுதிப்படுத்த, அவர்களின் மாதிரிகள், இறுதி மற்றும் விரிவான ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட விமானி மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு விமான விபத்து விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisement