தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
வால்பாறை: பொதுத்தேர்வில் மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும், என, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா கூறினார்.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாணவர் சேர்க்கை, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விபரம், பள்ளி கட்டடம் மற்றும் வகுப்பறை குறித்தும் ஆய்வு செய்தார். அதன் பின் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாரம் தோறும் நடத்தப்படும் குறுந்தேர்வை நல்ல முறையில் எழுத வேண்டும். பொதுத்தேர்வை மாணவர்கள் சிறப்பாக எழுத வேண்டும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைக்க வேண்டும்.
கல்வியால் மட்டுமே மாணவர்கள் உயர்ந்த நிலையை எட்ட முடியும். இதை கருத்தில் கொண்டு, மாணவர்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும். குறிப்பாக, பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து மாணவர்கள் நன்கு படித்து, அதிக மதிப்பெண் பெற வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
ஆய்வின் போது, மாவட்ட கல்வி அலுவலர் அழகிமீனாள்(பொ), தலைமை ஆசிரியர்கள் சிவன்ராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.