போடி மெயின் ரோட்டில் சென்டர் மீடியன் தேவை

போடி, செப். 4 -

போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க சென்டர் மீடியன் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக, கேரளாவை இணைக்கும் மூணாறு, போடிமெட்டு, குரங்கணி, டாப்ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மெயின் ரோடாக போடி அமைந்து உள்ளது. போடி காமராஜ் பஜார், தேவாரம் மெயின் ரோடு, பி.ஹைச்., ரோட்டில் தட்டிகள், பிளக்ஸ், பிளாட்பார கடைகள் வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் 60 அடி மெயின் ரோடானது தற்போது 30 அடியாக சுருங்கி உள்ளது. போடி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருமலாபுரம் ரோடு வரை பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் மக்களும் சிரமம் அடைகின்றனர். அடிக்கடி வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு மெயின் ரோட்டில் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறையினர் சர்வே செய்து பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு ஆகற்றினர். சில நாட்களில் மீண்டும் மீண்டும் ஆக்கிரமித்து உள்ளனர். சார்பதிவாளர் அலுவலகம், போடி டவுன் போலீஸ் ஸ்டேஷன், பி.ஹைச்., ரோட்டில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை போலீசாரும் கண்டு கொள்வது இல்லை. போடி மெயின் ரோட்டில் தேவையான இடங்களில் மைய தடுப்புகள் அல்லது நிரந்தரமாக சென்டர் மீடியன் அமைக்க நெடுஞ்சாலைத்துறை, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement