பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை; அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி

கோவை: ''பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, மண்டல வாரியாக ஏற்ற பருத்தி ரகங்களை கண்டறிந்து, சாகுபடி செய்ய ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்,'' என கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார்.

தமிழக கைத்தறி, துணிநுால் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, கோவையில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகம், பாலமுருகன் கோ-ஆப்டெக்ஸ், லுாம்வேர்ல்ட் நிறுவனங்களில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.

பின் செய்தியாளர்களிடம் அ வர் கூறியதாவது:

தற்போதைக்கு நமது தேவையில் 2 முதல் 3 சதவீதம் பருத்தி, மாநிலத்தில் உற்பத்தியாகிறது. மீதமுள்ள பருத்தி வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது.

விவசாயிகள் எந்தெந்த பருத்தி ரகங்களை சாகுபடி செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதையும், அவற்றை எந்தெந்த பகுதிகளில் சாகுபடி செய்ய முடியும் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

சலுகைகளுடன் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளிடமிருந்து நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்வதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement