ராமநாதபுரத்தில் கிருஷ்ண  ஜெயந்தி விழா கோலாகலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 251 கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகளின் பாத வடிவில் அரிசி மாவினால் வரைந்து வழிபட்டனர். கிருஷ்ணன் கோயில்களில் பொங்கல் வைப்பது, திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தன. மாவட்டம் முழுவதும் 251 கண்ணன் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் 170 கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் உறியடி, பால்குடம், சிறுவர்களுக்கான போட்டிகள், அன்னதானம் நடந்தன. கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். 

*பரமக்குடி அருகே கமுதக்குடி மவுன்ட் வேர்ல்ட் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி பொருளாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சேர்மன் பூமிநாதன், நிர்வாகி சிவா முன்னிலை வகித்தனர். முதல்வர் பிரிட்டோ ராஜ் வரவேற்றார்.

அப்போது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களை திறமையானவர்களாக உருவாக்கும் பாங்கு பற்றி பேசினர். இதே போல் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

*திருவாடானை அருகே புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ருக்மணி, கிருஷ்ணர் திருக்கல்யாணம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ருக்மணி, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  

Advertisement